
வெயிலில் வெந்து, காய்ந்து போய், மிச்சமிருக்கும் கொஞ்ச நஞ்ச தண்ணீரையும் உடம்பில் இருந்து உறிஞ்சிவிடும் சூட்டில் கிடந்து வதங்கிப் போன வரமிளகாய்க்கு பசுஞ்சோலையைக் கண்டால் எப்படி இருக்கும்??
அப்படித்தான் இருந்தது அவளைக் கண்ட போது எனக்கு!
ஏழாம் வகுப்பு வரை பெண்கள் வகுப்பறை பக்கம் செல்லும் தேவையை எங்கள் ஆசிரியர்கள் உருவாக்கித் தரவில்லை.. ஆமாம், தரவேயில்லை!! பொருத்தோம்.. பொருத்துப் பயனில்லை என்பதை உணர்ந்தோம்.. வாய்ப்பை நாங்களே உருவாக்கிக் கொண்டோம் - அவளைக் காண்பதற்காகவே!
என் ரகசிய மனவறையில் அவளுக்காகக் காத்துக்கிடந்த நாட்கள் ஏராளம். நான் எதிர்பார்த்த சந்தர்ப்பங்கள் அவளுக்கு எதிர்பாராத சந்தர்ப்பங்களாயின.. அவளுக்குத் தெரிந்தும், அவள் அப்பாவுக்குத் தெரியாமலும் அவளைச் சுற்றி வர ஆரம்பித்தேன்; அவளை எண்ணிப் பித்தனானேன்.. ஆம், எட்டாம் வகுப்புப் பித்தன்!
அவள் குடும்பமும் எங்களுக்கு ஒரு வகைச் சொந்தம் தான் என்று அம்மா சொன்னபோது என் அப்பாவை மனங்குளிர வாழ்த்தினேன்- நல்ல அம்மாவைத் தேர்ந்தெடுத்ததர்க்காக.
இந்தச் சேதி என்னை அவளுடன் உரிமையுடன் பழகும் சுதந்திரத்தையும், சுதந்திரத்துடன் பழகும் உரிமையையும் கொடுத்தது. ஆனாலும் எட்டாம் வகுப்பு முடிவில் அவள் வீட்டுக்கு நானும், என் வீட்டுக்கு அவளும் ஒவ்வொரு முறையே போய் வர முடிந்தது.
ஒன்பதாம் வகுப்பில் என்னைப் பள்ளி மாற்றிவிட்டனர் என் பெற்றோர் (அவளுக்காக அல்ல- அவள் போன்ற தேவதைகளையெல்லாம் பள்ளியில் சேர்த்திக் கொண்டு பையன்களின் வாழ்வில் விளையாடும் பள்ளி நிர்வாகத்தைக் கண்டித்து!)
என் நினைவுகளில் இருந்து மெல்ல மெல்லத் தேய்ந்து கொண்டிருந்த அவள் இந்த உலகத்தை விட்டும் விலகிக் கொண்டிருந்தாள். தொடர் காய்ச்சலைத் தொடர்ந்து புறக்கணித்து வந்த அவள் பெற்றோர், அவளைக் காலனிடம் ஒப்படைத்தனர். சேதி கேட்ட அன்று என் நினைவுகள் முழுக்க அவளே ஆக்கிரமித்தாள்.
அவள் பெயர் சுபாஷினி.
எட்டாம் வகுப்புக் காதல், எட்டாக் காதலானது!
