Sunday, May 22, 2011

அமாவாசையே நெரந்தரமாச்சு!!

மொத கொழந்த சொமக்கையில
ஒத வாங்கி அழுகையில
இப்படித்தான் பொண்டாட்டின்னா
ரத்தம் சிந்தனுமோ-னு
பயந்து வியந்து இருந்தியேடீ..

தேவதையே கண்மணியே-னு
ஒன்னப் பெத்தவனும் பெத்தவளும்
கொஞ்சி அஞ்சி அனுப்பயில
தெரியலியே வரப்போகும்
கொடுமையெலாம் அவங்களுக்கு..

ஒன் வீட்டு கூடத்திலே,
மாளிகையில, மாடத்துல
நீ குதிச்ச குதியெல்லாம்
ஒன் முதுகுல ஒம் புருசன்
குதிச்சி மெதிச்சி ஆடுநப்போ
ஞாபகம்தான் வந்திருச்சோ..

சந்தைக்கிப் போயி நீயும்
பருப்பி வாங்கி வந்தீயன்னா
எல்லாருக்கும் பங்கு போட்டு
படியளந்த கிளியாவ..
புகுந்த வீட்டுக் கூண்டுலதான்
ஊமையான கிளியானியே..

நாத்தனா மவ புவநேச
ஊமக்கோட்டான் உம் புருசனுக்கு
கட்டி வெக்க ஏற்பாடு
தட புடலா நடக்கயில
எந்த ஊரு தைரியத்துல
பொறந்த வீடு போகாம
பொருமைய சாதிச்சியோ..

கண்ணே பொன்னே
செல்லமே செம்பவழமேன்னு
திட்டி வளத்த ஒன் அப்பனால,
நாயே சனியனே
பேயே கேனச்சினு
ஒம் புருசனப்போல
கொஞ்சத்தான் முடிஞ்சிருக்கா??

விட்டுக்குடு விட்டுக்குடுன்னு
கெட்டுப்போன ஒம் புருசனுக்கு
வாழ்க்கையவே விட்டுக்குடுத்து
வெட்டுப் பட்டு நிக்கிறியேடீ..

நாளக்கி விடியுமென்னு
நாள் முளுக்கக் காத்திருந்து
அடுத்த நாளும் விடிகையில
ஒன் வானத்துல மட்டும் ஏன்டீ
அமாவாசையே நெரந்தரமாச்சு??

1 comment:

  1. அமாவாசை இருட்டில் லாவகமாக செல்ல பழகிக்கொண்டோம் பரணி

    ReplyDelete